karnataka government has broken all corruption records said amith shah
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கர்நாடக அரசு, ஊழலில் புதிய சாதனை படைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவின் “கர்நாடகா பரிவர்த்தன யாத்திரை”யைத் தொடங்கிவைத்து அமித் ஷா பேசியதாவது:
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கர்நாடகா ஆண்டு விழாவை கொண்டாடுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் வாக்கு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு கர்நாடகாவில் சர்ச்சைக்குரிய திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக திப்பு ஜெயந்தியின் போது சர்ச்சைகளும் வன்முறைகளும் வெடிக்கின்றன. எனினும் வாக்கு வங்கியை குறிவைத்து காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறது. இது காங்கிரசுக்கு எந்தவிதத்திலும் பலன் தராது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் கர்நாடகாவில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முதல்வர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும்.
இதுவரையிலான ஊழல் சாதனைகளையெல்லாம் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு முறியடித்து, ஊழலில் புதிய சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் அரசை விமர்சித்து பேசினார்.
