மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அன்று முதல் இன்று வரை மேகதாது விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியது. மேலும், இதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளது. கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது விவகாரத்தில், கர்நாடகாவின் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி அனைவரும் ஒரே அணியாக உள்ளனர். தமிழக சட்டசபையிலும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அனைவரும் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்றார். கர்நாடகாவின் 10 முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். தமிழக சட்டசபையில், மேகதாது அணைக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுகவும், திமுகவின் தீர்மானத்திற்கு அதிமுகவும் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை காக்கும் அதே நேரத்தில் உரிமையை விட்டு கொடுக்கக்கூடாது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக ஒரு பக்கம் கேரளாவுடனும், மறுபக்கம் கர்நாடகாவுடன் கையேந்தும் நிலையில் உள்ளது என்றும் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவெற்றப்பட்ட தீர்மானத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் மேகதாது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு என்று தெரிவித்தார். இதனிடையே மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
