நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்தாண்டு பெரும் சிரமப்பட்டு மீட்கப்பட்ட அரசு டாக்டர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டாக்டர் மனோஜ்குமார் மீண்டும் நித்யானந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக கைலாசா நாட்டுக்கு சென்றாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் விவசாயி காந்தி (61). இவரது மனைவி ஈஸ்வரி (52). மகன் மனோஜ்குமார் (30). டாக்டரான இவர், தனது 21 வயது அக்கா மகளுடன் கடந்த ஆண்டு காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை விசாரித்தபோது, திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காந்தி, தனது மகன், பேத்தியை விடுவிக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த நித்யானந்தாவின் சீடர்கள், டாக்டர் மனோஜ்குமார் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருப்பதாக கூறினர். 

இதனையடுத்து, அவர்களை பார்க்க சென்ற மனோஜ்குமாரின் உறவினர்களை ஆசிரம ஊழியர்கள் விரட்டியடித்தனர். இதனால் தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெங்களூர் விரைந்தனர். அங்கு கர்நாடக போலீசார் உதவியுடன் நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் இருந்த டாக்டர் மனோஜ் குமார் மற்றும் நிவேதாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தியதால் சமாதானம் அடைந்த டாக்டர் மனோஜ்குமார், தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆனால் பணிக்கு செல்வதாக கூறிச்சென்ற மனோஜ்குமார், கடந்த 4 மாதங்களாக காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்று அவரது தந்தை காந்தி, மீண்டும் பெரியகுளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். தற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு வீடியோ வெளியாகி வரும் நிலையில் கைலாசா நாட்டுக்கு செல்ல ஏராளமானோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருவம் நிலையில், அவர் நித்யானந்தா இருக்கும் கைலாசா நாட்டுக்கு சென்று விட்டாரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.