நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து, கருத்து வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவின் நிபந்தனையற்ற மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

கேரளாவை சேர்ந்த இளம்பெண் சவுமியா கடந்த 2011-ம் ஆண்டு திருச்சூரில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த விமர்சனத்துக்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கட்ஜூ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, கட்ஜூவை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தனது கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக மார்கண்டேய கட்ஜூ தெரிவித்து இருந்தார். கட்ஜூ மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.