நீதிபதி கர்ணனுக்கான தண்டனையை உடனே கேன்சல் பண்ண முடியாது…கடுமை காட்டிய தலைமை நீதிபதி கெஹர்…

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனசாட்சியுடன் எடுத்த முடிவு என்றும், இதை உடனடியாக திரும்பப் பெற வாய்ப்பில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தைச் சேர்ந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், சக நீதிபதிகள் பற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால், அவர் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து.

தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கை விசாரித்த, நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை திரும்ப பெறக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் மேத்யூஸ் நெடும்பரா  என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  

இந்நிலையில், தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு  நேற்று முத்தலாக் தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தது.

அப்போது, விசாரணையின் இடையே ஆஜரான வழக்கறிஞர்  நெடும்பரா, நீதிபதி கர்ணன் மனு குறித்து தலைமை நீதிபதி கெஹர் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

மேலும், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும், நீதிபதி கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கும் நிலையில் இதுதொடர்பான மனுவை உச்ச நீதிமன்ற பதிவாளர் வாங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைக்கேட்ட தலைமை நீதிபதி கெஹர்,  இது வேறொரு வழக்கை விசாரிக்கும் அமர்வு ஏன் நீங்கள் இங்கு வருகிறீர்கள் என கடுமை காட்டினார்.

முதலில் பதிவாளரிடம் சென்று மனுவை பதிவு செய்யுங்கள். நீங்கள் எந்த ஒரு நடைமுறையையும் மதிக்க மாட்டீர்கள். உங்கள் போக்கிலேயே நடப்பீர்களானால், எந்த வேலையும் நடக்காது என அவர் தெரிவித்தார்.

நீதிபதி கர்ணன் விவகாரத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனசாட்சியுடன்தான் முடிவை எடுத்துள்ளது என்றும்  எனவே, அதை உடனடியாக திரும்பப் பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.