இந்தியாவில் இட ஒதுக்கீடு என்ற வியாதியைப் பரப்பியவர் அம்பேத்கர் என கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தும் வகையில் அனைத்துத் துறைகளிலும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 69 %  இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா கடந்த  ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில்  அம்பேத்கரை அவமதிக்கும் விதமாக கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார் என டி.ஆர் மெக்வால் என்பவர்,  ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பட்டியலின சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஹர்திக் பாண்ட்யாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''எந்த அம்பேத்கர் குறுக்குச் சட்டத்தை இயற்றியவர் மற்றும் அரசியல் அமைப்பு அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு எனப்படும் நோய்களைப் பரப்புபவர்களை உருவாக்கியவர்'' என ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டிருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்தப் பதிவு, அம்பேத்கரை அவமதிக்கும்  செயல் என்றும் இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனுவில் மெக்வால் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த  ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.