திருவனந்தபுரம், அக்.22-

தொழில்முறை மருத்துவர்களுக்கு ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீ-சர்ட் உடைகள் உகந்தது அல்ல எனவும் இதுபோன்ற உடைகளை அணிந்து கல்லூரிக்கு இளம் மருத்துவர்கள் வரக்கூடாது எனவும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடை

மாணவ- மாணவியர் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும். மாணவியர் சேலை அல்லது சுடிதார் மற்றும் வெள்ளை நிற ‘கோட்’ அணிந்து கல்லூரிக்கு வர வேண்டும்.

மாணவர்கள் சாதாரண பேண்ட் அணிந்து ஷூ அணிந்து இருக்க வேண்டும். ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் அணிய அனுமதியில்லை. பெண்களும் லெக்கின்ஸ் மாடல்கள் பேண்ட்களை தவிர்க்க வேண்டும்.

வழக்கமான உத்தரவா?

இந்த உடைகள் தவிர வேறு உடைகள் அணிந்து, வளாகத்திற்கு வந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் மாணவியர் வளையல், கொலுசு போன்ற ஓசை எழுப்பும் பொருட்களையும் பயன்படுத்த கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவிற்கு மாணவ- மாணவியர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் போராட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கிரிஜாகுமாரி கூறும்போது, இது புதிய உத்தரவு அல்ல. வழக்கமான உத்தரவுதான். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற உத்தரவுகள் தெரிவிக்கப்படும்.

அறிவுரை

இதில் ‘‘மாணவ- மாணவியருக்கு ஏதேனும் எதிர்ப்பு இருந்தால், வாருங்கள் இதுகுறித்து விவாதிக்கலாம். நீங்கள் நேர்த்தியாக தொழில்முறை மருத்துவர்கள் போல் தோற்றமளிக்க, ஆசிரியர்களாகிய எங்களின் யோசனைதான் இது’’ என்றார்.