பஹல்காம் பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Rs.20 lakh reward for information on Pahalgam terrorists: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை காவல் துறையினர் வெளியிட்டனர். இதில் ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா ஆகிய இருவர் பாகிஸ்தானியர்கள். மூன்றாவது நபர் தான் அப்துல் உசேன் தோகர். காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசிப்பவர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்

இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இதில் பயங்கரவாத தளபதிகள் உள்பட 100 முக்கியமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா பயங்கரவாதிகள் மீது கைவைத்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவின் எல்லைகளை குறிவைத்து தாக்கியது. இதனை முறியடித்த இந்திய ராணுவம் பதிலடியாக பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள், ராணுவ நிலைகளை சின்னபின்னமாக்கியது.

பயங்கரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா 100க்கும் மேற்‍பட்ட பயங்கரவாதிகளை அழித்தாலும் பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஹாஷிம் மூசா என்ற சுலேமான் மற்றும் அலி பாய் என்ற தல்ஹா மற்றும் அப்துல் உசேன் தோகர் ஆகிய பயங்கரவாதிகளை பிடிக்க ஜம்மு காஷ்மீர் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. சோபியன் மாவட்டத்தில் சந்தேக நபர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பயங்கரவாதம் இல்லாத காஷ்மீர்

"பயங்கரவாதம் இல்லாத காஷ்மீர்" என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகளில், பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்துத் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எந்த வழியாக வந்தனர்? எப்படி தப்பிச்சென்றனர்? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா அதிக பயங்கரவாதிகளை கொன்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றாலும் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும்படி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.