கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு தண்ணீர் விடக்கோரி கர்நாடக மாநிலத்துக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால், அந்த மாநிலம் தண்ணீர் தர மறுத்தது. இதையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தண்ணீர் கேட்ட காரணத்துக்காக தமிழர்களின் உடமைகள், பொருட்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், பல லட்சம் பொருட்கள் நாசமானது.
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தடை விதிக்க கோரி பீட்டா அமைப்பு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் ஆனது.

இந்நிலையில், இந்தாண்டு தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூகநல ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தி, 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர்.

இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் திரண்டு, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கைது செய்ததை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதன் தாக்கம், மற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரவி, நூற்றுக்கணக்காக அதிகரித்தது.
பின்னர், மாநிலம் முழுவதும் இந்த போராட்டம் தொடங்கி, தற்போது லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்ட களத்தில் குவித்துள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாநில அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கனடா உள்பட பல வெளிநாடு வாழ் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து, வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பாலாவுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கம்பலா போட்டி என்பது, தண்ணீரில் மாடுகளை ஓட்டி கொண்டு பந்தயத்தில் செல்வது. இதில் என்ன வித்தியாசம் என்றால், தமிழகத்தில் ரேக்ளா போட்டி என்பதுதான். ரேக்ளா போட்டி சாலையில் பந்தயமாக நடத்தப்படும். கம்பலா, தண்ணீரில் நடத்தும் விளையாட்டு.

தமிழகம் மட்டுமின்றி கார்நாடகவிலும் பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கு தடை விதித்துள்ளதால், கர்நாடகாவில் வாழும் கன்னடர்கள் மற்றும் தமிழர்கள், ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா விளையாட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காவிரி தண்ணீர் கேட்டதற்கு, தமிழர்களை தாக்க முயன்ற கன்னடர்கள், இன்று பாரிம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு தெரிவித்து போராட்ட களத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து வீடியோ காட்சியும் வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சியில் கூறப்படுவதாவது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததுபோல், கர்நாடகாவில் கம்பாலா என்ற போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் மற்றும் தமிழர்கள், இணைந்து போராடுகிறோம்.
இந்த போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள், இந்த தடையை நீக்கும் வரை இந்த போராட்டம் கண்டிப்பாக தொடரும் என கூறியுள்ளனர்.
