உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு டுவிட்டர் வழியாக தொடர்ந்து தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்.
கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில் “ தமிழர் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'' என தமிழில் பதிவிட்டு தமிழர்களுக்கும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன் எழுச்சியாக திரண்டு இருக்கும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருக்கிறார்.
ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை கொண்டு வரப்பட்டபோது, ஜல்லிக்கட்டு என்ற பெயரை பொங்கல் விளையாட்டு என்று மாற்றி நடத்துங்கள் என்று அசராமல் தனது ஆலோசனைகளை கூறி கலக்கியவர் மார்க்கண்டே கட்ஜூ. அதேபோல இந்த முறையும் தனது ஆலோசனைகளை அள்ளி, தமிழக எம்.பி.களுக்கும், தமிழக அரசுக்கும் விதைத்துள்ளார்.

கடந்த 14-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவசரக் கடிதம் எழுதி, உடனடியாக அவசரச் சட்டத்தை பிறப்பிக்க ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தனது கல்லூரிக் காலத்தில் தமிழ் குறித்த பட்டயப்படிப்பு படித்தது குறித்தும், தமிழக எம்.பி.களுக்கும் ஆலோசனை கூறியும்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மார்கண்டேய கட்ஜூ வெளியட்ட பதிவில் கூறுகையில், “ 1963-65 ம் ஆண்டுகளில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் போது, தமிழ் குறித்த பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்தேன். அந்த தமிழ் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு வார்த்தை இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதுதான் தமிழரின் வீரம்; தமிழர் வாழ்க்கை. தமிழர்கள் என்றாலே வீரமானவர்கள், அந்த வீரமே அவர்கள் நீடூடி வாழ வகை செய்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தமுடியாமல் தொடர்ந்து போராட்டங்கள் தமிழகத்தில் உருவாகி உள்ளதை அறிந்தேன். தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எம்.பி.கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, டெல்லிக்கு புறப்படுங்கள்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, உடனடியாக ஜல்லிக்கட்டு தொடர்பாக மிருகவதை தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அவசரச்சட்டம் பிறப்பிக்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்துங்கள். காளைகளுக்கு எந்த விதமான துன்புறுத்தல் இல்லாமல் ஜல்லிக்கட்டுப்போடு நடக்கும் என்று கூறுங்கள். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சம்பந்தப்பட்டது '' எனத் தெரிவித்துள்ளார்.
