ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று டெய்லர் கண்ணையா லாலை கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்ற கொலையாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இருவரும் பைக்கில் ஹெல்மெட் அணிந்து தப்பிச் செல்லும்போது சிக்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றுக்காலை கண்ணையா லால் (வயது 48) என்ற டெய்லர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முகம்மது நபியை பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய விமர்சித்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து எழுந்த கண்டன குரல்களால் அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கண்ணையா லால் குரல் கொடுத்து இருந்தார். இதையடுத்து கண்ணையாவுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டு இருந்தன.

Scroll to load tweet…

இந்த நிலையில்தான் நேற்று இவரது கடைக்கு சட்டை தைக்க அளவு கொடுக்க வந்தது போல் இருவர் வந்தனர். அதில், அளவு கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே திடீரென கண்ணையாவை ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தினார், பின்னர் தலையை துண்டித்தார். இதையடுத்து அந்த இடத்தில் இருந்து கொலையாளிகள் இருவரும் தப்பிச் சென்றனர்.

கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு தனிப்படை அமைத்து தேடியது. அப்போது, பைக்கில் கொலை குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தப்பிச் சென்றது தெரிய வந்தது. ஜெய்ப்பூருக்கு வெளியே நெடுஞ்சாலையில் தப்பிச் சென்றபோது இருவரும் பிடிபட்டனர் என்று ராஜ்சமந்த்தைச் சேர்ந்த தலைமை போலீஸ் அதிகாரி சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட கோஸ் முகமது, ரியாஸ் அக்தாரி இருவரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சித்தனர். கீழே விழுந்து புரண்ட அவர்களை போலீசார் திறமையுடன் பிடித்து கைது செய்தனர். 

கொலை செய்யப்பட்ட கண்ணையா லாலுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கொடூர மரணத்தை அடுத்து, இவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கி, ரூ. 31 லட்சத்தை இழப்பீடாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.