இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா அவரின் மனைவி ரீவா சோலங்கி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜாவுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரவிந்திர ஜடேஜாவும், அவரின் மனை ரீவா சோலங்கியும், நேற்று முன்தினம் இரவு குஜராத் மாநிலம், ஜாம் நகருக்கு சென்றனர். ஆடி எஸ்.யூ.வி. காரை ரவிந்திர ஜடேஜா ஓட்டிச் சென்றார்.

அப்போது கார் ஜாம்நகர் வித்யாசாகர் கல்வி நிறுவனத்தின் அருகே வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அப்பகுதியில் கூட்டம் கூடியது. ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதையடுத்து, ரவிந்திரஜடேஜாஅந்த பெண்ணை தனது காரில் தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
அந்த பெண் ஜாம்நகர் வித்யாசாகர் கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார் என்றும், அவரின் பெயர் ப்ரீத்தி சர்மா என்றும் தெரியவந்தது. இப்போது அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து இந்த பெண்ணின் தவறால் நடந்ததா, அல்லது ரவிந்திர ஜடேஜா மீது தவறா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
