ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் 6792 மீட்டர் உயரமுள்ள லியோபுர்கில் மலையில் ஏறி சாதனை படைத்துள்ளனர்

தைரியம் மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழக மலையேறுதல் மற்றும் ஹைகிங் கிளப் (JUMHC) மாணவர்களின் சிறிய குழுவானது கடந்த 17ஆம் தேதி (நேற்று) லியோபுர்கில் மலையின் 6792 மீட்டர் உயரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்கள் குழு அனைத்து முரண்பாடுகளையும் மீறி, வழிகாட்டும் தலைவரின் உதவியின்றி, மூத்த மலையேறுபவரான கவுதம் தத்தா தலைமையில் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளது.

1971ஆம் ஆண்டில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ITBP) துணிச்சலான வீரர்கள் முதன்முறையாக லியோபுர்கில் மலையில் ஏறினர். 1991 ஆம் ஆண்டில், இ. தியோபிலஸ் மற்றும் சில சாகசக்காரர்களின் குழு இரண்டாவதாக மலையில் ஏறி தங்கள் முத்திரையைப் பதித்தனர். இதையடுத்து, ராஜ்சேகர் மைதி மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த குழுவினர் கம்பீரமான லியோபுர்கில் சிகரத்தை அடைந்தனர். 2022ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்களின் சவாலான காலகட்டத்துக்கு மத்தியில் துணை கமாண்டர் குல்தீப் சிங், துணைத் தளபதி தர்மேந்திரா தலைமையிலான ITBP இன் 12 வீரர்கள் குழு உச்சத்தை எட்டினர்.

11 வயதில் குழந்தை திருமணம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் இளைஞர்!

ரியோ புர்கில் என்றும் அழைக்கப்படும் லியோபுர்கில் மலையானது மேற்கு இமயமலையில் உள்ள அற்புதமான ஜன்ஸ்கர் மலைத்தொடரின் தெற்கு முனையில் கம்பீரமாக நிற்கிறது. இந்தியா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் சீனாவின் திபெத் இடையேயான எல்லையில் அமைந்துள்ள அந்த மலை சாகச ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இமயமலை போன்ற உயரமான சிகரங்கள் மீது ஏற பல்வேறு வழிகாட்டும் தலைவர்களை நம்பியிருக்கும் மலையேறுபவர்கள் மத்தியில், ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் குழு படைத்திருக்கும் சாதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மாணவர்களின் திறன் அவர்களது மன உறுதியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறுகிறார்கள். அவர்களின் சாதனை லியோபுர்கில் மலையின் வரலாற்றில் மற்றொரு அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புகழாரம் சூடப்படுகிறது. 

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மலையேறுதல் மற்றும் ஹைகிங் கிளப் (JUMHC) குழு 1978 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு ஜோகின் II மலையின் (6342 மீ) உயரத்தை அடைந்தது முதல், ஜோகின் சிகரங்கள் முழுவதையும் அக்குழுவினர் ஒரே பயணத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர். தற்போதைய லியோபுர்கில் மலையேற்ற சாதனை அக்குழுவின் சாதனை உலகில் தனித்துவம் படைத்துள்ளது.