ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கி தமிழக அரசு அவசரச்சட்டம் நேற்று பிறப்பித்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விளக்கம் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை தொடர்ந்து 3 ஆண்டாக இந்த ஆண்டும் நீடித்தது. ஆனால், ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்திய தீர வேண்டும் என்ற தீர்மானத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் தன் எழுச்சியாக மாநிலம் முழுவதும் கடந்த 5 நாட்களாக அறவழிப்போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, மாநில அரசு அவசரஅவசரமாக மத்தியஅரசுடன் பேசி அவசரச்சட்டத்தைக் கொண்டு வந்து இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஆலோசனைகளையும், ஆதரவாகவும் இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில்வெளியிட்ட செய்தியில், “ ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவசரச்சட்டம் பிறப்பித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பல நகரங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை(இன்று) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல இளைஞர்கள் என்னை ஜல்லிக்கட்டு பார்க்க வரக்கூறிபேஸ்புக், டுவிட்டரில் அழைப்புகள் விடுக்கிறார்கள். எனக்கு விமான டிக்கெட் எடுக்க ஆயத்தாமாக இருக்கிறார்கள், தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்ய விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
எனக்கு தமிழ்நாட்டில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க விருப்பம்தான் ஆனால், என மனைவி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். ஆதலால், ஜல்லிக்கட்டுப்போட்டி பார்க்க என்னால் வரமுடியாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தமிழக மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த வெற்றியை கொண்டாடுங்கள்.
தற்போதுள்ள கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டத்தை சட்டப்பேரவையில், சட்டமுன்வடிவாக அறிமுகம் செய்து நிறைவேற்ற வேண்டும். அதன்பின் நிரந்த சட்டமாகும். அதன்பின் கவலைப்படத் தேவையில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
