தேசத்தின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்த கொண்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலும் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி மலையுச்சியில் இந்தோ-திபெத் எல்லை பகுதியில் பாதுகாப்பு போலீசார் முகாமிட்டுள்ளனர். அங்கு 20 டிகிரி மைனஸில் குளிர் நிலவி வரும் சூழலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நாட்டுப்பற்றுடன் குடியரசு தினத்தை கொண்டாடியிருக்கின்றனர். மலையை சுற்றிலும் பனி படர்ந்து காணப்படும் நிலையில் மூவர்ண தேசிய கொடியை கையில் ஏந்தி பாதுகாப்பு போலீசார் அணிவகுத்து வந்தனர்.

 

பின் ஒரே வரிசையில் அணிவகுத்து நின்ற அவர்கள் பாரத் மாதாகி ஜெய் என்றும் வந்தே மாதரம் என்றும் கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பான காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குடியரசு தினத்தை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் கொண்டாடியது மக்களிடையே தேச உணர்ச்சியை தூண்டியிருக்கிறது.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!