கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் ஆடிட்டர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்வர் குமாரசாமியின் ஆடிட்டர் எச்பி சுனிலின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவின் மேற்கு குமாரா பூங்காவில் இருக்கும் சுனிலின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. 

கடந்த 3 மாதங்களில் சுனிலின் வீட்டில் 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது. கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது சுனிலின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடைபெறுவது அரசியல் உள்நோக்கத்துடன் சாதனையா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. சுனிலிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமானவரும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவரே ஆடிட்டராக இருந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. குமாரசாமியின் மனைவி அனிதா மற்றும் மகன் நிகில் ஆகியோரின் சொத்துக்களையும் சுனில் கவனித்து வருகிறார். இதேபோல குமாரசாமியின் உதவியாளர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.