ஒவ்வொரு  வருஷமும்  இஸ்ரேல் போலீஸ் கேரள மாநிலம் கண்ணூருக்கு  வருகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?  அவர்கள் எதற்காக வருகிறார்கள்  என்பது தெரிந்தால் நாம்  அனைவருமே பெருமை கொள்ளலாம்.


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் போலீசின் கண்கள் கண்ணூரில் உள்ள மரியான் அப்பேரல்ஸ் நிறுவனத்தின் மீது திடீரென பதிந்தது. என்ன காரணம் தெரியுமா ? அந்நிறுவனம் தயாரிக்கும் ஆயத்த ஆடைகள் உலகம் முழுக்க பெயர் போனவை.


இதைத் தொடர்ந்து   இஸ்ரேல் போலீசின் அனைத்து சீருடைகளும் கண்ணூர் மரியான் அப்பேரல்ஸ்  நிறுவனமே தயாரித்து அளித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 700 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இஸ்ரேல் போலீசின் உடைகள் இங்கு மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் இஸ்ரேல் போலீஸ்  மரியான் அப்பேரல்ஸ்  நிறுவனத்திடம் மாதிரி சீருடை  ஒன்றை தைத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. அந்த மாதிரி சீருடை  சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து அப்ரூவல் கொடுத்த பின்னர் தற்போது இஸ்ரேல் போலீசின் சீருடைகள் இங்கிருந்துதான்  தைத்து அனுப்பப்படுகிறது.


தற்போது ஒரு லட்சம் சீருடைகள் கேரள மாநிலம கண்ணூரில் இருந்து தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை  இஸ்ரேல் போலீஸ் , சீருடை தைக்க மரியான் அப்பேரல்ஸ்  நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கிறது.


இந்த சீருடைகளை தைப்பதற்கான ஒரு செட் துணிகளை அமெரிக்காவில்  இருந்தும், மற்றொரு செட் துணிகளை மும்பையில் இருந்தும் மரியான் அப்பேரல்ஸ்  நிறுவனம்  இறக்குமதி செய்கிறது.


சீருடையின் ஒவ்வொரு  பகுதியும் தனித்தனி பணியாளர்களால் தைக்கப்படுகிறது. ஒரு பகுதி ஒரு இடத்தில் தைக்கப்பட்டால் அதன் மற்றொரு பகுதி எங்கு தைக்கப்படுகிறது என்பது அனைத்தும் ரகசியமாவே வைக்கப்படுகிறது. இதே போன்று இஸ்ரேல் போலீஸ்  சீரூடையில் உள்ள  எம்பலமும் (emblem)    இந்த மரியான் அப்பேரல்ஸ் நிறுனத்திலேயே தைத்துக் கொடுக்கப்படுகிறது.


இறுதியில் சீருடைகள் நேர்த்தியாக அயன் செய்யப்பட்டு அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறது. இஸ்ரேலில் இருந்து இரண்டு போலீசார் கண்ணூருக்கு வந்து தைத்து தயாராக வைக்கப்பட்டுள்ள சீருடைகள் ஒழுங்காக தயாரிக்கப்பட்டுள்ளதா  என ஆய்வு  செய்த பின்னரே  பெட்டிகளில் அடைக்கப்படுகிறது.


இதில் பெருமைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், மரியான் அப்பேரல்ஸ் நிறுவனத்தில்  பணி புரியும் 700  ஊழியர்களில் 650 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.