ரம்ஜான் பண்டிகைக்கு முஸ்லிம் அல்லாத வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டாம் என எந்த இஸ்லாமிய அமைப்பும் தெரிவிக்கவில்லை என்று கர்நாடக ஜம்மியத் உலமா சபை தெரிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகைக்கு முஸ்லிம் அல்லாத வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டாம் என எந்த இஸ்லாமிய அமைப்பும் தெரிவிக்கவில்லை என்று கர்நாடக ஜம்மியத் உலமா சபை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து கர்நாடகாவில் உள்ள மசூதிகள், இஸ்லாமிய மதபோதகர்களை கட்டுப்படுத்தும் அமைப்பான ஜம்மியத் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில்கள், திருவிழாக்களில் இஸ்லாமிய வியாபாரிகளை புறக்கணிக்கவும், அவர்கள் கடைகளை நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து சில சமூக விரோதிகள் நடத்திய போராட்டங்கள் எங்களுக்கு கவலையை அளித்தன. அதே நேரம் சமூக வலைதளங்களில் ரமலான் மாதம் மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு முஸ்லிம் அல்லாத வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டாம் என எந்த இஸ்லாமிய அமைப்பும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

இஸ்லாமியர்களின் பெயரிலும் சமுதாயத்தை கலங்கம் கற்பிக்கும் வகையிலும் சில சமூக விரோதிகளால் தவறான செய்திகள் பரப்பட்டு வருகின்றன. அவர்களின் நோக்கம் சமூக ஒற்றுமையையும், அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்கெடுப்பதே. இந்த நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இதை பகிர்பவர்களின் நோக்கம் விஷமத்தனமானது. எந்த இஸ்லாமிய கட்சியோ, நிறுவனமோ, தலைவர்களோ இதுபோன்ற பிரச்சாரங்களை ஆதரிக்கவில்லை. பகிரவும் இல்லை. இதுபோன்ற புறக்கணிப்புகள் இஸ்லாமிய மார்க்கத்திலும் கலாச்சாரத்திலும் இல்லை. எந்த உண்மையான இஸ்லாமியரும் இதுபோன்ற தகவல்களை பகிர மாட்டார். ஒரு பொறுப்புள்ள முஸ்லிமாக இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஒரு முஸ்லிம் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கும் மரியாதை தர வேண்டும். எந்த மதத்தினருக்கும் நாம் கேடு நினைக்கக்கூடாது.

நம்மை சுற்றி வசிக்கும் அனைத்து மதத்தவர்களின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்தாக வேண்டும். முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் நல்ல விதமாக நடத்த வேண்டும். இதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்த பாடம். அண்டை வீட்டார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். மத வெறியர்களின் சதித்திட்டத்தில் யாரும் விழுந்துவிட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மத ரீதியாக யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க வேண்டாம். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் அனைத்து மெசேஜ்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து மற்றவர்களுக்கு நாம் அனுப்ப வேண்டும். அதே நேரம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத மோதல்களை தூண்டும் வகையிலான பதிவுகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
