நாளை முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், சேவை கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் தனியே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை, IRTC ஆன்லைன் முன்பதிவு செய்யலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்த ஆன்லைன் வாயிலாக,
'ஏசி' வசதி பெட்டியில் பயணம் செய்வதற்கு, ஒரு டிக்கெட் எடுக்க, 40 ரூபாயும், சாதாரண பெட்டியில் பயணிக்க 20 ரூபாயும், சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மத்திய அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்க, 2016-ம் ஆண்டு நவம்பரில், செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், IRTC ஆன்லைனில், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, சேவை கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது.

 

இதனால், IRTC நிறுவனத்திற்கு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வாயிலாக கிடைத்த வருவாய், 26 சதவீதம் குறைந்தது. செலவு குறைவால் பலரும், ஆன்லைனில் டிக்கெட் எடுத்து வந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்கு, மீண்டும், சேவை கட்டணம் வசூலிக்க, IRTC நிறுவனத்திற்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. 

இந்நிலையில், நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஏசி இல்லாத வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.15, ஏசி வகுப்புக்கு ரூ.30 சேவைக்கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியும் வசூல் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.