ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவில்லை, வேறு எதற்காகவோ நடக்கிறது என்று சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.

இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும் என்றார். நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக சிபிஐ தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் தரப்பில் முதலில் கபில்சிபல் வாதிட்டார்.

  

பின்னர், அபிஷேக் சிங்வி வாதிடுகையில், இடைக்கால முன்ஜாமீனை 7 மாதங்கள் கழித்து டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன். ஏற்கனவே விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் சம்பந்தப்பட்ட 6 அரசு செயலாளர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினார். அந்த 6 பேரில் ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.

மேலும், 24 மணிநேரமாக தூங்கவில்லை என்று நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைக் கைது செய்திருப்பது தவறு. நேற்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட 12 கேள்விகளில் 6 கேள்விகள் ஏற்கனவே சிதம்பரம் பதிலளித்தவையாகும். 

சிதம்பரம் வாதாட விருப்பம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் வாதாட விரும்புவதாக அபிஷேக் சிங்வி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவருக்கும் வாதாட உரிமை உண்டு என்று அபிஷேக் சிங்கி வாதிட்டார். ஆனால், இதற்கு சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகை தரக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.