ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டது.  

இதனையடுத்து, ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். அதில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டே பிறகே  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். காவலில் எடுத்து விசாரிக்கும் போது மட்டுமே முழுமையான விசாரணை வெளிவரும் என்றார். மேலும், அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை, ஆனால், சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார். அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும் என சிபிஐ வழக்கறிஞர் துஷர் மேத்தா வாதிட்டார். 

இதனையடுத்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில்சிபல் முதலீடுகளை அனுமதித்த உத்தரவை FIPB அமைப்பில் இருந்த 6 செயலாளர்கள் வழங்கினார்கள். ஆனால், அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. 10 ஆண்டுகள் கழித்தே இந்த வழக்கில் FIR போடப்பட்டது. சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம் கபில்சிபல் கூறினார். 

இதனையடுத்து அபிஷேக் சிங்வி வாதிடுகையில், இடைக்கால முன்ஜாமீனை 7 மாதங்கள் கழித்து டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன். ஏற்கனவே, விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் சம்பந்தப்பட்ட 6 அரசு செயலாளர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினார். அந்த 6 பேரில் ஒருவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார் என கூறினார். இருதரப்பு வாதங்களும் சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இதனையடுத்து, தீர்ப்பு அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுவதாக நீதிபதி கூறினார். 

இதனையடுத்து தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்று நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.