ப.சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகே ப.சிதம்பரத்தை கைது செய்ததாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்பட்டது.  

இதனையடுத்து, ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் முன்னிலையில், ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான துஷர் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். அதில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டே பிறகே  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். காவலில் எடுத்து விசாரிக்கும் போது மட்டுமே முழுமையான விசாரணை வெளிவரும் என்றார். 

மேலும், அமைதியாக இருப்பது அரசியல் சாசன உரிமை, ஆனால், சிதம்பரம் அமைதியாக இருந்து அனைத்து கேள்விகளையும் தவிர்த்து வருகிறார். அந்த கேள்விகளுக்கு அவர் மட்டுமே பதிலளிக்க முடியும் என்றார். ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடமும், மற்றவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட விதம் குறித்தும், அதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கொடுத்த விளக்கம் குறித்து துஷர் மேத்தா நீதிபதிக்கு விளக்கமளித்து வாதத்தை நிறைவு செய்தார். இந்த வழக்கில் சிபிஐ கடுமையான வாதங்களை முன்வைத்துள்ளதால் ப.சிதம்பரத்து ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.