ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

மும்பையை சார்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று தருவதற்கு ரூ.305 கோடி சட்டத்திற்கு புறம்பாக பணப்பரிமாற்றம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த 20ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு முறையென மொத்தம் ஒன்பது நாட்கள் சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தம்மை கைது செய்யாமல் இருப்பதற்காக ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் பானுமதி மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் இரண்டு நாள் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிதம்பரத்தை கைது செய்யாமல் எங்களால் உண்மையை வரவழைக்க முடியாது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ப.சிதம்பரத்துக்கு சலுகைகள் வழங்கினால் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட வங்கி மோசடிகளுக்கு பாதகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து காரசார விவாதம் நடைபெற்றது. 

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.