டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று மாலை காரில் வந்த ப.சிதம்பரம் பாதி வழியிலேயே இறங்கியதாகவும், அதன் பிறகு எங்கு சென்றார் என தனக்கு தெரியாது எனவும் ஓட்டுநர் அதிகாரிகளிடன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எப்படியாவது ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் 4 முறை சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அவரை காணவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ப.சிதம்பரம் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் சிபிஐ கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே, அவரது ஓட்டுநரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தில் நேற்று பாதி வழியில் இறங்கிய ப.சிதம்பரம் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.