நாட்டில் உள்ள அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் குறிப்பாக சீன நிறுவனங்களிடம், என்ன விதமான பாதுகாப்பு அம்சங்களை செல்போனில் பயன்படுத்துகிறீர்கள், பயன்படுத்துவரின் தனிப்பட்ட தகவல்களை எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து மத்தியஅரசு விவரங்களைக் கேட்டுள்ளது.

 டோக்லாம் எல்லையில் இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நீடித்து இருப்பதைத் தொடர்ந்தும், அதிகமான சீன மின்னணு பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவதாலும் இந்த விசாரணையை மத்தியஅரசு மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது-

 ஆகஸ்ட் 28-ந்தேதிக்குள் அனைத்து செல்போன் நிறுவனங்களும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பி உள்ளகேள்விகளுககு பதில் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மொபைல் போன்களில் இருந்து உள்நாட்டு விவரங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தன. இதனால், செல்போன்கள் வாங்கும் போதே, அதனுள் இருக்கும் மென்பொருள்கள், ஆப்ஸ்கள்(செயலி)குறித்து விசாரணை செய்யப்படுகிறது.

செல்போன் நிறுவனங்கள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.  இந்த விவரங்களை அளிக்காத நிறுவனங்கள் மீது ஐ.டி. சட்டம் 43 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  இது குறித்து இதுவரை 21 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பெருமபாலும் சீன நிறுவனங்களாகும். சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகிறதா என்று முக்கியமாக விசாரணை செய்யப்படும். அதில் தவறுகள் ஏதும் இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை நிறுவனங்கள் மீது எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.