நாடுமுழுவதும் 2 ஆயிரம் நகரங்களில் சர்வதேச தரத்தில், மிகப்பெரிய அளவில் பஸ் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. ஆயிரம் கோடி தொகையை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையங்கள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் உருவாக்கப்பட இருக்கிறது.

மும்பையின் புறநகரான நவி மும்பையில் ‘தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு’ நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நாடு முழுவதும் 2 ஆயிரம் நகரங்களில் சர்வதேச தரத்தில் மிகப்பெரிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. ஆயிரம் கோடியை மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பஸ்நிலையங்களில் அனைத்துவிதமான வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த பஸ்நிலையங்கள் அமைக்க, மாநில அரசுகள் விரும்பி அதற்குரிய திட்டங்களை மத்தியஅரசுக்கு அனுப்பினால், மத்தியஅரசு தகுந்த ஆய்வு நடத்தி, நிதி உதவிகளை வழங்கும். ‘பஸ் போர்ட்’ என்று அழைக்கப்படும் சர்வதேச பஸ்நிலையம் முதன் முதலில் நாக்பூர், வதோதரா நகரங்களில் அமைக்கப்படும்.

இனி வரும் காலங்களில் டீசலில் இயங்கும் பஸ்களை குறைத்துவிட்டு, பயோகியாஸ், மெத்தனால், பேட்டரி மூலம் இயங்கும் பஸ்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கு டீசலில் இயங்கும் பஸ்கள் சிறப்பாக இருக்காது. விரைவில் டீசல் எஞ்சின் உற்பத்தியாளர்களுக்கு அரசு நெருக்கடி அளிக்கும்.

நெடுஞ்சாலைகளில்  தற்போது வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 80கி.மீ. ஆக இருக்கிறது. இது விரைவில் 120கி.மீ.ஆக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.