2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அதிரடி சலுகையை அறித்துள்ளது. 

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மந்திரி பியூஷ் கோயல், ‘’ ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ.1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் வரை உள்ளவர்கள் வருமானவரி செலுத்த தேவையில்லை. அமைப்புசாரா தொழிலார்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ. 3ஆயிரம் வழங்கப்படும். 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வரிவிலக்கு ரூ.10,000லிருந்து, ரூ.40,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டு வருமானம் 6.5 லட்சம் இருப்பவர்கள் பி.எஃப், நிர்ணயிக்கப்பட்ட பங்குகளுகளில் முதலீடு செய்தால் வரி செலுத்த வேண்டாம். வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரிச்சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் கோடி கண்டறியப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் நுகர்வோருக்கு ரூ.80,000 கோடி வரிச்சுமை குறைந்துள்ளது. 

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியா உருவாகும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022-க்குள் விண்வெளியில் இந்தியா தடம் பதிக்கும். கிராமப்புற தொழில்துறை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை. வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும். 2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.