ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அம்மாநில தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த 28ம் தேதி அன்று தனியார் கிளப்பில் நடந்த மது விருந்தில் 17 வயது சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது மது விருந்து முடிந்து அதிகாலையில் அந்த விடுதியை விட்டு வெளியேறி, அந்த சிறுமியின் ஆண் நண்பர்கள் சிறுமியை காரில் கொண்டு போய் வீட்டில் விடுவதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த சிறுமியும் அவர்களுடன் காரில் ஏறி இருக்கிறார். ஆனால் நேராக அந்த சிறுமியின் வீட்டில் சென்று விடாமல் ஹைதராபாத் முழுவதும் இரண்டு மணி நேரமாக சுற்றி வந்து இருக்கிறார்கள். அந்த இரண்டு மணி நேரத்தில் ஐந்து பேரும் மாறி மாறி அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். இதன் பின்னர் அந்த சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து அவரை வீட்டில் கொண்டுபோய் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

மகளின் உடல் நிலையையும் சிறுமியின் கழுத்திலிருந்த காயங்களையும் பார்த்து சந்தேகமடைந்த தந்தை அதுக்குறித்து கேட்ட போது, தனக்கு நேர்ந்ததை சிறுமி கூறியிருக்கிறார். இதை அடுத்து சிறுமியின் தந்தை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் ஐந்து பேரில் ஒருவரின் பெயரை மட்டும் சொல்லியிருக்கிறார். அதற்கு மேல் சொல்ல முடியாத மனநிலையில் இருந்து இருந்திருக்கிறார் அந்த சிறுமி. இதை அடுத்து சிசிடிவி காட்சிகளின் மூலம் ஆய்வு செய்ததில் 5 பேர் யார் என்பதை போலீசார் விசாரித்துள்ளனர். அந்த ஐந்து பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பதும் அந்த 5 பேரும் தெலுங்கானா மாநிலத்தின் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனால் போலீசார் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு என்று பதிவு செய்யாமல், பாலியல் தொந்தரவு என்று வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

இதை அறிந்த பாஜகவினர் காவல் நிலையம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால், வேறுவழியின்றி அதன் பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் ஐந்து பேரில் ஒருவரை கைது செய்தனர். அதன் பின்னர் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தி வந்த நிலையில், அரசியல் அழுத்தங்களை எல்லாம் மீறி 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் அவசர உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
