கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகிய முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 2019 நவம்பரில் 1.5 சதவீதம் குறைந்து இருந்தது. அதனால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் குறைந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 40 சதவீதம் உள்ளது. அதனால் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறைந்தாலும், ஏற்றம் கண்டாலும் அதன் தாக்கம் தொழில்துறை உற்பத்தியில் வெளிப்படும்.

கடந்த நவம்பர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. 2018 செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், கடந்த நவம்பரில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கண்டுள்ளதால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.