Indias Soumya Swaminathan becomes WHOs Deputy Director General
தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன், ஐ.நா.அமைப்பின் உயர் பதவியைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார் சௌம்யா சுவாமிநாதன். இவர், வேளாண் விஞ்ஞானியும், இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் அனைத்தும், உலக சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குனர் பதவிக்கு தலா ஒருவரைப் பரிந்துரைக்கலாம். அதன்படி, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டவர் சௌம்யா சுவாமிநாதன். இவர் தற்போது இப்பதவியைப் பெற்றுள்ளார்.
58 வயதான சௌம்யா சுவாமிநாதன், குழந்தைகள் நல மருத்துவர், சுமார் 30 வருடங்கள் மருத்துவ ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றவர். முன்னதாக சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் இயக்குனராகப் பணிபுரிந்துள்ளவர். காச நோய் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி சாதனை புரிந்தவர்.
இவருடன் பிரிட்டனின் ஜேன் எல்லிசன் கார்பரேட் ஆபரேஷன்ஸ் பிரிவின் துணை இயக்குனராக பதவியேற்கவுள்ளார். இவருடன் மேலும் 10 பேர் உதவி இயக்குனர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.
