கொரோனாவின் அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதலே முக்கியமான ஒன்று. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324ஐ எட்டியுள்ளது. 

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வந்தாலும், இந்தியாவில் இன்னும் பொதுச்சமூகத்தில் கொரோனா பரவவில்லை. எனவே பொதுச்சமூகத்தில் பரவுவதற்கு முன்பாக, அதை கட்டுப்படுத்தி, தடுத்து விரட்டுவது முக்கியம்.

அதனால் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் தனிமைப்படுதலின் முக்கியத்துவத்தையும் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. 

கொரோனா பாதிப்பில் பொதுச்சமூகத்திற்கு பரவுவதற்கு முந்தைய கட்டத்தில் இருக்கும் இந்தியா, இதற்கு மேல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. அந்தவகையில், இன்று ஒருநாள், இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை சுய கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும் அதற்கு ஆதரவளித்து பின்பற்றிவருகின்றனர். 

இத்தாலியில், கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருந்தபோது, அந்நாட்டு அரசு மக்களை தனிமைப்படுத்திகொள்ளுமாறும் ஊரடங்கை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியது. ஆனால் அந்நாட்டு மக்கள் அலட்சியம் காட்டியதால் பேரிழப்பை சந்தித்துவருகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா என நாட்டின் முக்கியமான மாநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், பேரூராட்சிகள், கிராமங்கள் வரை அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். அதனால் நாட்டின் பெரு நகரங்கள், நகரங்கள் என்ற வேறுபாடின்றி அனைத்து ஊர்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

டெல்லியில் சாலையில் நடந்து திரிந்த சிலருக்கு போலீஸார், ரோஜாப்பூ கொடுத்து, அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். தமிழ்நாடு முழுவதும், ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள், கடைகள் என அனைத்துமே மூடப்பட்டு சுய ஊரடங்கிற்கு மக்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் கூட இயங்கவில்லை. இன்று காலை  4 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இந்தியாவே முற்றிலுமாக இன்று முடங்கியுள்ளது.