Nepal Plane Crash: நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்! வைரலாகும் இந்திய இளைஞர் வெளியிட்ட FB Live Video!
நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ள விமானத்தில் பயணித்த இந்திய இளைஞர்கள் வெளியிட்ட விபத்து முந்தைய கடைசி நிமிட பேஸ்புக் லைவ் வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.
நேபாளத்தில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, நடந்த விமான விபத்தில் விமானக் குழுவினர் நால்வர் உள்பட 68 பயணிகள் உயிரிழந்தனர். அந்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பொக்காரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் கொண்ட யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஆகும். காத்மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் ஞாயிறு காலை 11 மணி அளவில் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.
72 பேர் பயணித்த இந்த விமானத்தில் 11 வெளிநாட்டுப் பயணிகளும் பயணித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் சோனு ஜெய்ஸ்வால் (28), அனில் ராஜ்பார் (28), விஷால் சர்மா (23), அபிஷேக் சிங் (23) ஆகியோரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.
ஜனவரி 13ஆம் தேதி காத்மண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் பூஜைக்காகச் சென்றுவிட்டு அந்த விமானத்தில் பொக்காராவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் எடுத்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் சோனு ஜெய்ஸ்வாலின் முகம் மட்டும் சில வினாடிகளுக்குத் தெரிகிறது. மகிழ்ச்சியுடன் அவர்களுக்குள் பேசிக்கொள்வதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது. ஒன்றரை நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.