டிக் டாக் உள்ளிட்ட 59 சீன அப்ளிகேஷன்களுக்கு இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது இந்திய அரசு.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தால், இந்தியா - சீனா இடையேயான உறவில் விரிசல் பெரிதாகியுள்ளது. இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் இன்னும் பதற்றமான சூழலே நிலவுகிறது. 

சீனாவின் அத்துமீறலையடுத்து இந்திய அரசு, சீனாவுடனான வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியிலான உறவுகளில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவும், சீன முதலீடுகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடு விதிக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது இந்திய அரசு. 

இந்திய மக்களும் தன்னெழுச்சியாக சீன பொருட்கள் மற்றும் சீன மொபைல் அப்ளிகேஷன்களை புறக்கணித்துவருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான டிக் டாக், ஷேர் இட், ஹெலோ, வீ சாட், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன அப்ளிகேஷன்களை இந்தியாவில் பயன்படுத்த தடை விதித்துள்ளது இந்திய அரசு. 

சீன அப்ளிகேஷன்கள், அதை பயன்படுத்தும் இந்தியர்கள் குறித்த தகவல்களை பகிர்வதால், 59 சீன அப்ளிகேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். 

59 அப்ளிகேஷன்களில், அதிகமான மக்களால் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் சில ஆப்களான டிக் டாக், ஷேர் இட், ஹெலோ, வீ சாட், யூசி பிரவுசர், யூசி நியூஸ் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு ஆப்படித்துள்ளது இந்திய அரசு.