பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியா மீண்டு வருவதாக சர்வதேச செலாவணி நிதியத்தின் துணை மேலாண் இயக்குநர் தாவோ ஜாங் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் வகையில், பொருளாதார சீர்திருத்தங்களை இந்திய அரசி வகுத்துள்ளது. 

இந்தியாவில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியா மீண்டு வருவது வரவேற்கத்தக்க மாற்றம்.

இதுதவிர கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தனியார் மற்றும் அரசு முதலீட்டை ஊக்குவிப்பது, வங்கி மற்றும் நிதி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால் இந்திய பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும். இந்த நடவடிக்கைகள், செழிப்பான நாடுகளின் வருவாயை நோக்கி இந்தியா நகர்வதற்கு உதவியாக இருக்கும்.

தாராளமய வர்த்தகத்தால் இந்தியா பலனடைந்தது போல், கல்வி, சுகாதாரம், முதலீடு, வங்கிக் கட்டமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால், வர்த்தகத் துறை மேலும் செழிப்படையும். இந்தியாவுக்கும், சர்வதேச செலாவணி நிதியத்துக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்தப் பயணத்தின்போது எனது கருத்துகளை ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள், தொழில் துறையினர் ஆகியோரிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளேன் என்று அவர் கூறினார்.