குஜராத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர்.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர், சிறுமியர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தும் பின்பற்றப்படாமல் இருப்பது பெரும் கவலையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம், சுரேந்தர் நகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வரும் சிவம் என்கிற இரண்டு வயது சிறுவன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பெற்றோர் அப்போது அதே தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிவம் விழுந்துள்ளார். உடனடியாக சிறுவனின் தந்தை இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார், அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர், இந்திய ராணுவத்துடன் சேர்ந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை, ராணுவ மற்றும் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். பின்னர் சிறுவனை முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராணுவம் காவல்துறை மற்றும் கிராம மக்கள் உதவியுடன் 40 நிமிடங்களை சிறுவனை மீட்கும் பணி நிறைவடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிருடன் மீட்ட சிறுவனை ராணுவத்தினர் கட்டியணைத்து முத்தமிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
