Asianet News TamilAsianet News Tamil

பெண்களின் ஆபாச பேச்சில் மயங்கிய இந்திய விமானப்படை அதிகாரி!! பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்த பயங்கரம்

indian air force officer share security details with ISI
indian air force officer share security details with ISI
Author
First Published Feb 9, 2018, 9:53 AM IST


ஆபாச பேச்சில் மயங்கி இந்திய விமானப்படை பாதுகாப்பு தகவல்களை விமானப்படை அதிகாரியே பகிர்ந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வா. கடந்த மாதம் 31ம் தேதி ஸ்மார்ட் போனுடன் டெல்லியில் உள்ள இந்திய விமானப் படையின் தலைமையகத்துக்குள் நுழைந்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுவாக தலைமையகத்துக்குள் ஸ்மார்ட் போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. காவலர்கள், அருண் மார்வாவை சந்தேகத்தின் பேரில் சோதனைசெய்தனர். 

அப்போது அருண் மார்வாவிடமிருந்து ஸ்மார்ட் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்மார்ட்போன் எடுத்து சென்றதற்காக அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது. விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய தகவல்களை அருண் மார்வா பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து மார்வாவின் ஃபேஸ்புக், வாஸ்ட் அப் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அருண் மார்வாவுக்கு, கடந்த டிசம்பர் மாதம் இரண்டு பெண்களின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து நட்பு அழைப்பு வந்தது. அருண், அதை ஏற்றுக்கொண்டதும், அவர்கள் மாறி மாறி ஃபேஸ்புக்கில் அருண் மார்வாவுடன் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக மாறி வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்துகொண்டு ஆபாசமாக பேசியுள்ளனர்.

அந்த பெண்களின் பேச்சில் மயங்கிய அருண், அவர்கள் வீசிய மாய வலையில் சிக்கினார். அருண் ஆபாசமாக பேசியதை இணையத்தில் அம்பலப்படுத்திவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். நன்றாக பேசியவர்கள் ஏன் மிரட்டுகிறார்கள் என அருணுக்கு புரியவில்லை. பின்னர் தான் அவர்களின் உண்மைமுகம் வெளிப்பட்டது. அதையெல்லாம் நெட்டில் விடக்கூடாது என்றால் இந்திய விமானப்படையின் பாதுகாப்பு தகவல்களை பகிரும்படி வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது அருணுக்கு தெரியவந்துள்ளது.

வேறு வழியில்லாமல் அருணும் பகிர்ந்துள்ளார். இந்திய விமானப்படையின் செயல்பாடுகள் பற்றிய ஆவணங்களை மொபைலில் படமெடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். மேலும் பல தகவல்களை அனுப்புவதற்காகத்தான் ஸ்மார்ட்போனுடன் தலைமையகத்துக்குள் நுழைந்துள்ளார். அப்போது தான் பிடிபட்டுவிட்டார்.

அருணுடன் பேசிய நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். மூத்த விமானப்படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், அருண் மார்வா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்லி போலீஸ் நேற்று அவரைக் கைதுசெய்தது.

ஆபாச பேச்சுக்கு மயங்கி இந்திய விமானப்படை அதிகாரி, பாதுகாப்பு தகவல்களை பகிர்ந்துகொண்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios