கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவுக்கு வர்த்தக ரீதியான உறவில் கடிவாளம் போடுகிறது இந்திய அரசு. சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதற்கு அதிகமான அளவில் சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யுமளவிற்கு, ஏற்றுமதி செய்யாததே காரணம். கல்வான் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைப்பதற்கான முன்னெடுப்புகளை மோடி அரசு எடுக்க தொடங்கிவிட்டது. 

சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது, சீன முதலீடுகளை பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் என சீனாவிற்கு வர்த்தக ரீதியில் நேரடியாக சவாலளிக்க தொடங்கியுள்ளது இந்தியா.

சீனாவின் உற்பத்திகளுக்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது. அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், சொந்த நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில், உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதனால் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் என பல விஷயங்களுக்கு நாம் சீனாவை சார்ந்திருக்கிறோம். இந்நிலையில், சீனாவை சார்ந்திருப்பதை தகர்த்தெறிய மோடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கிவிட்டார். 

மத்திய அரசு, சீனாவிற்கு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடியும் சவாலும் கொடுக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் 29ம் தேதி சீனாவின் 59 மொபைல் அப்ளிகேஷன்களை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு தடை விதித்தது.. இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவாலளிக்கும் விதமாகவும், ஆப்களை பயன்படுத்தும் இந்தியர்களின் ரகசியங்களுக்கு பாதுகாப்பில்லாத 59 சீன அப்ளிகேஷன்களுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது. டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், வீ சாட், கேம் ஸ்கேனர், யுசி பிரவுசர், யுசி நியூஸ் உள்ளிட்ட 59 சீன அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் இந்தியாவில் சீனா எந்த முதலீட்டையும் செய்ய முடியாத வகையில் ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்குபெறுவதை அனுமதிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. கூட்டுத்திட்டமாக இருந்தால் கூட, எந்தவிதமான முதலீட்டு பங்களிப்புகளுக்கும் அனுமதி கிடையாது என்று நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதேபோல மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், தங்களது துறை சார்ந்த சீன பொருட்களின் இறக்குமதிக்கான கதவு இந்தியாவில் மூடப்படுவதாக தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை, உணவுத்துறை என துறை வாரியாக சீன முதலீட்டிற்கும், சீன பொருட்களுக்கும் தடை விதித்துவருகிறது இந்தியா.