உலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலகளவில் பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் என உலகில் 203 நாடுகளில் கொரோனா வைரஸ் மெல்ல கால்பதித்து தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2903 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 62 பேர் பலியாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாவால் மக்கள் பெருத்த அச்சம் அடைந்திருக்கின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நேற்று முன்தினம் ராம நவமி பண்டிகையை இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டாடி இருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடர் பண்டிகைகள் வருகிறது. 6ம் தேதியன்று மகாவீர் ஜெயந்தியும், 9ம் தேதி புனித வியாழனும், 10ம் தேதி புனித வெள்ளியும், 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், 13-ஆம் தேதி சரண் பூஜையும், 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை இந்தியா கடந்து செல்ல இருக்கிறது. இதுநாள் வரையில்  ஊரடங்கு காலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தி இருந்த மக்கள் அடுத்துவரும் பண்டிகை நாட்களிலும் தங்களை தனிமைப்படுத்தி வீடுகளில் இருந்தவாரே அவற்றை கொண்டாட வேண்டும்.

தற்போது இந்தியா கொரோனா வைரஸ் நோயின் முதல் காலகட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கும் நிலையில் அடுத்து வரக்கூடிய நாள்கள் மிகுந்த சவாலாக இருக்கக் கூடியதாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவற்றை கடப்பதற்கு மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். கவனம் மக்களே..!