ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது எதிரொலியாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்துவதாக இருந்த  ப.சிதம்பரம் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதைதொடர்ந்து வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி அளிக்கும்படி கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அனுமதி வழங்கியது. 

அவர் வெளிநாடு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது. 

சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்து சென்றது சிபிஐ.பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
 
இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் ப.சிதம்பரம் உரை நிகழ்த்துவதாக இருந்த நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டு இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.