உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணையும் போர் பகுதியில் இருந்து  இந்திய அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்களும் உருகுலைந்துள்ளன. இதன் காரணமாக உக்ரைனில் இருந்து ஏராளமானோர் வெளியேறி அகதிகளாக அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 17ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை தற்காலிகமாக நிறுத்தி கிவ் பகுதியில் சிக்கியிருந்த இந்தியர்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து பலரும் போர் பகுதியில் இருந்து வெளியேற உதவியாக இருந்தது.

ஏற்கனவே இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி பாகிஸ்தான் மற்றும் துருக்கியை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேறினர். இந்திய தேசிய கொடியை வெள்ளை துணியில் வரைந்து அங்கிருந்து தப்பித்ததாக அவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக் உக்ரைனில் படித்து வருகிறார். போர் தீவிரமாக நடைபெற்று வரும் கிவ் பகுதியில் சிக்கியிருந்துள்ளார். உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த இடத்தில் இருந்து வெளியேற தொடர் முயற்சி மேற்கொண்டு வந்தார். போர் தீவிரமாக நடைபெற்று வந்ததால் தங்கிருந்த பகுதியில் இருந்து தப்பிக்க முடியாத நிலை அஸ்மா ஷபீக் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைன் கிவ் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை வெளியேற்றும் நடவடி்கையில் ஈடுபட்டு வந்துள்ளது. அங்கு சென்ற அஷ்மா ஷபீக் உக்ரைனில் இருந்து வெளியேற உதவிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து இந்தியர்களை மட்டும் மீட்டு வந்த மத்திய வெளியுறவுத்துறை பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக்கையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்மா ஷபீக் வெளியிட்டுள்ள வீடியோவில், போர் நடைபெற்றுவரும் கிவ் பகுதியில் இருந்து தப்பிக்க சிரமப்பட்டதாக தெரிவித்தார். போர் பகுதியில் இருந்து வெளியேறியதற்கு இந்திய தூதரகம் தான் காரணம் என தெரிவித்தார். தனக்கு உதவி செய்த இந்திய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவிவருகிறது. தற்போது இந்திய அதிகாரிகளால் மீட்கப்பட்ட பாகிஸ்தான் பெண் உக்ரைனில் இருந்து வெளியேறிய நிலையில் விரைவில் தனது குடும்பத்தோடு இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.