உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. தினமும் 500 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 13,387 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 437 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 பேர் பலியாகி உள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 1,749 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 3,205 பேர் பாதிக்கப்பட்டு 194 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களில் 300 பேர் நலமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 1,640 பேரும், தமிழ் நாட்டில் 1,267 பேரும், ராஜஸ்தானில் 1,131 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி வருகிற மே3ம் தேதி வரையில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அப்பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் மக்கள் சில தொழில்களை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. அதற்கான இடங்களையும் தொழில்களையும் மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.