தலைநகர் டெல்லியில் ஏழு மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஏழு மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தொடங்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு என்பது சுனாமியை விட பேரலையாக மாறப்போவதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நுழைந்துள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தனது பிடியை இருக்கு வருகிறது. ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்தோடு இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் மராட்டிய மாநிலத்தில் தான் முதல் உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் சிஞ்ச்வார்ட் பகுதியை சேர்ந்த 52 வயதான நபர் ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழந்ததாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. நைஜீரியாவில் இருந்துவந்த அவர், ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 28-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அந்த நபர் கடந்த 13 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணம் ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்பட்டது என்று மகாராஷ்டிரா மாநில அரசு பதிவு செய்துள்ளது.

மகராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 198 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும் பேரதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாமலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு ஒமைக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 198 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 25, அரியானாவில் 23, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 5 பேருக்கும், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட்வர்கள் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவோடு டெல்டா வகை கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரண்டு நாட்களுக்கு பத்தாயிரத்திற்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா தொற்று தற்போது 15 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில், 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 220 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 98.36 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
