சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் அதிக ஆப்ஸ்(செயலிகள்) டவுன்லோடு நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது. அந்த ஆண்டில் 1900 கோடி ஆப்ஸ்களை மொபைலில் டவுன்லோடு செய்துள்ளனர் நம்மவர்கள்.

ஆய்வு நிறுவனமான ஆப்அன்னி சமீபவத்தில் சர்வதேச அளவில் மொபைல்களில் டவுன்லோடு செய்யப்படும் ஆப்ஸ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கைகளை தற்போது அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவல் அதிகம் ஆப்ஸ் டவுன்லோடு செய்யப்படும் டாப் 5 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

2019ம் ஆண்டில் உலக முழுவதுமாக 20,400 கோடி ஆப்ஸ் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1900 கோடி ஆப்ஸ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டை காட்டிலும் சென்ற ஆண்டில் ஆப்ஸ் டவுன்லோடு செய்வது 195 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்கா மற்றும் சீனாவில் முறையே 5 மட்டும் 80 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருந்தது.

இந்தியர்கள் ஒரு நாளைக்கு 3.5 மணி நேரம் மொபைலில் நேரத்தை செலவிடுகின்றனர். இருப்பினும் இது உலக சராசரி அளவை (3.7 மணி நேரம்) காட்டிலும் சிறிது குறைவாகும். இந்தியாவில் கூகுள் பே, அமேசான், எம்.எக்ஸ். பிளேயர் மற்றும் டிக்டாக் ஆகிய ஆப்ஸ் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் டிக்டோக்கில் 75 கோடி மணி நேரத்தை மொபைல் பயன்படுத்துவர்கள் செலவிட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.