ஓமன் நாட்டின் மன்னராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்(79) . இவர் 1970ல் தனது தந்தையின் ஆட்சியை கவிழ்த்து விட்டு 29 வயதில் அந்நாட்டின் மன்னரானார். அதன்பிறகு தான் ஓமன் வளமிக்க  எண்ணெய் உற்பத்தி நாடக வளர்ச்சி பெற தொடங்கியது. தொடர்ந்து 40 ஆண்டுகள் ஓமன் நாட்டின் மன்னராக காபூஸ் சிறப்பான நிர்வாகத்தை நடத்தினார். கல்வி,மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு வித்திட்டார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியின்றி அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றிருந்தார். நாடு திரும்பிய நிலையில் நேற்று மன்னர் மரணமடைந்ததாக ஓமன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காபஸ் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் தனக்கு பிறகான மன்னரையும் அறிவிக்கவில்லை. இதனால் அரச குடும்பத்தினர் ஒன்று கூடி அடுத்த மன்னரை தேர்வு செய்ய இருக்கின்றனர். மன்னர் காபூஸ் மரணமடைந்ததை அடுத்து 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட இருப்பதாக ஓமன் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே ஓமன் மன்னருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவிலும் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நாளை தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அரசு சார்ந்த நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஓமன் மன்னருக்கு வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு ஓமனை வளமிக்க நாடாக மாற்றியவர் காபூஸ் என்றும் அவர் உலக சமாதானத்தின் கலங்கரை விளக்கம் எனவும் கூறியிருக்கிறார்.