இந்தியர்கள் உக்ரைன் செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்தியர்கள் உக்ரைன் செல்வதை தவிர்க்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யா நாளையே போர் தொடுக்கலாம் என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உருக்கமாக உரையாற்றியுள்ளார். உக்ரைன் எல்லையில் லட்சக்கணக்கான ராணுவ துருப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அங்கே முகாம்கள் அமைத்து பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக மருத்துவ முகாம்களும் அதிவிரைவாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இது நிச்சயம் போருக்கான அறிகுறி தான் என கூறப்படுகிறது. போரில் வீரர்கள் காயமடைந்தால் சிகிச்சையளிக்கும் நோக்கில் மருத்துவ முகாம்கள் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோல போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், குண்டு போடும் ஜெட்கள் போன்றவற்றையும் நிலை நிறுத்தியுள்ளதாக சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைனில் ஊடுருவலாம் என தெரிகிறது. அதேபோல உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பான நேட்டோவைச் சேர்ந்த படைகளும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் போர்ச் சூழல் உருவாகும் நிலையில் இருக்கிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் லட்சம் துருப்புகளை குவித்த ரஷியா, போர் பயிற்சியில் இறங்கி இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனை உணர்ந்து பல்வேறு நாடுகளும் தங்கள் மக்களையும் தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்து வருகின்றனர்.

இதையடுத்து ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகள் தங்கள் மக்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற துவங்கி உள்ளனர். அந்த வரிசையில், உக்ரைனில் நாட்டில் தங்கி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றியும் நிலை குறித்தும் தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க தூதரகம் தொடர்ந்து செயல்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.