நாடாளுமன்றத் தாக்குதலின்போது பாஜக எம்.பி.க்கள் ஓடிவிட்டனர்: ராகுல் காந்தி!
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடந்த போது, பாஜக எம்.பி.க்கள் அங்கிருந்து விரைவாக ஓடி விட்டனர் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே, மக்களவையில் கடந்த 13ஆம் தேதியன்று அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளாக்கம் அளிக்கக் கோரியும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்துக்கொத்தாக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இரு அவைகளிலும் மொத்தம் 145 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22ஆம் தேதி (இன்று) போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
அதன்படி, நாடு முழுவதும் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து நரேந்திர மோடி அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்பதை சரிசெய்யுமாறும் ஆளுங்கட்சியை அவர் கேட்டுக் கொண்டார்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கிண்டல் செய்த ராகுல் காந்தி, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் நடந்தபோது, அவையில் இருந்த தேசபக்தர்கள் என்று அழைக்கப்படும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் விரைவாக ஓடிவிட்டனர் என்றார்.
ஸ்டாலின் கேட்ட NDRF நிதி குறித்து வாய் திறக்காத நிர்மலா சீதாராமன்!
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு காரணம் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.
ஜந்தர் மந்தரில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் புகை உமிழும் கருவியை வெடிக்கச் செய்தனர். அப்போது பாஜக எம்.பி.க்கள் அனைவரும் ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் கடும் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்ற மற்றொரு கேள்வி உள்ளது. இதற்கு பதில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்தான்.” என்றார்.
தேசிய ஊடகங்களை தாக்கி பேசிய ராகுல் காந்தி, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து ஊடகங்கள் பேசவில்லை. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை நான் பதிவு செய்ததாக விவாதிக்கின்றனர் என்றார்.