இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை: 1977 தேர்தலை சுட்டிக்காட்டிய சரத் பவார்!
இந்தியா கூட்டணிக்கு பிரதமர் முகம் தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த நிலையில், மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் பதவிக்கு ஒரு முகத்தை முன்னிறுத்துவது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
புனேவில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 1977 மக்களவை தேர்தலில் எமர்ஜென்சிக்குப் பிறகு இந்திரா காந்திக்கு எதிராக ஜனதா கட்சி அமோக வெற்றியைப் பெற்றதை சுட்டிக்காட்டினார்.
“1977 தேர்தலில், பிரதமர் வேட்பாளராக எந்த முகமும் முன்வைக்கப்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு, மொராஜி தேசாய் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்பு அவரது பெயர் எங்கும் பேசப்படவில்லை. உண்மையில், ஒரு புதிய கட்சி தோன்றியது. தேர்தலுக்குப் பிறகு, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆக்கப்பட்டார். எனவே, பிரதமர் பதவிக்கு ஒரு முகத்தை முன்னிறுத்தாவிட்டாலும் எந்த விளைவுகளும் ஏற்படாது.” என சரத் பவார் தெரிவித்தார்.
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி முன்மொழிந்தார்.
யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் பிரதமர் மோடி!
எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒரு முக்கிய தலித் முகமாக இருப்பதால், மம்தாவின் முன்மொழிவு பரவலான அங்கீகாரத்தையும் பெற்றது. மொத்தம் 28 கட்சிகள் தற்போது இந்தியா கூட்டணியில் உள்ளன. அதில், 12 கட்சிகள் மம்தாவின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் உரசல் போக்கை கடைப்பிடிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட இதனை ஆதரித்துள்ளார்.
ஆனால், இந்த முன்மொழிவை கண்ணியமாக மறுத்த மல்லிகார்ஜுன கார்கே, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பது மட்டுமே தனது விருப்பம் என கூறிவிட்டார். அதேசமயம், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டதில் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதிஷ் குமார், மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என தெரிவித்தார்.