India bangladesh
இந்தியா- – வங்காளதேசம் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
இந்தியா-வங்காளதேசம் இடையே பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ அணுசக்தி, நீண்டநாட்களாக கிடப்பில் இருக்கும் டீஸ்டா நதிநீர் பங்கீடு உள்ளிட்ட 22 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது.
மேலும், நீண்ட கால அடிப்படையில் வங்காள தேசத்தின் வளர்ச்சிக்காக ரூ. 2.8 லட்சம் கோடி ரூபாயையும் கடனுதவியாக இந்தியா வழங்க உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே, பஸ், ரெயில் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளதேச பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா வந்துள்ள வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தொடக்கி வைத்தனர்.

4 நாட்கள் பயணம்
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறிச் சென்று நேரில் வரவேற்றார். பிரதமர் ஹசீனாவுக்கு நேற்று முப்படைகளின் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு இறுதியில், வங்காள தேசத்தில் தேர்தல் வரவுள்ளது. அதற்கு முன்பாக இந்தியாவின் உதவியோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு வங்காள தேச பிரதமர் முனைப்பு காட்டி வருகிறார்.
பாதுகாப்பு - அணுசக்தி
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய குழுவினரும், ஹசீனா தலைமையிலான வங்காள தேச குழுவினரும் நேற்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் முடிவில் பாதுகாப்பு, அணு சக்தியை ஆக்கப்பூர்வமான வகைகளுக்கு பயன்படுத்துதல் உள்பட 22 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி வங்காள தேசத்தின் வளர்ச்சிக்காக ரூ. 2.8 லட்சம் கோடியை நீண்ட கால அடிப்படையில் இந்தியா வழங்க உள்ளது. மேலும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 3,200 கோடி கடனாக வழங்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவ தளவாடங்கள்
இதேபோன்று மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா - வங்க தேசத்தின் குல்னா இடையே ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாதுகாப்பு துறை தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி வங்காள தேசத்திற்கு இந்தியா ராணுவ தளவாடங்களை வழங்கும்.
இரு நாட்டுக்கும் இடையே பயணிகள் கப்பலை இயக்குவது, இணைய பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் நேற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வங்காள தேசத்தின் விடுதலைக்கு போராடிய ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயர் டெல்லியில் உள்ள தெரு ஒன்றுக்கு நேற்று சூட்டப்பட்டது.
அவரது மகள்தான் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி மகிழ்ச்சி
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியதாவது:- வங்காள தேசத்துடனான உறவு இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உறவு இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வழி வகுக்கும். டீஸ்டா நதிநீர் உடன்படிக்கை என்பது இரு நாட்டுக்கும் முக்கியமான விவகாரமாக உள்ளது. இது விரைவில் தீர்க்கப்படும் என நம்புகிறேன். இது தொடர்பாக பேசுவதற்கு மேற்கு வங்காள முதல் அமைச்சரை அழைத்திருந்தேன். எனது விருந்தினராக அவர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நல்லதே நடக்கும்
இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு தரும் என்பதை வங்காள தேச மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார். அவரது பேச்சு எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. வங்காள தேசத்தின் வளர்ச்சிக்கும், அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும். இரு தரப்புக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இரு நாட்டு மக்களுக்கு நல்ல பயனை ஏற்படுத்தும்.
கூடுதல் மின்சாரம்
எல்லையில் வர்த்தக மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. வங்காளதேசம் – பூடான் – இந்தியா – நேபாளம் இடையிலான மோட்டார் வாகன ஒப்பந்தத்தை இந்தியா விரைவில் ஏற்படுத்தும். இதன் இந்த 4 நாடுகள் இடையே தரைவழி போக்குவரத்து எளிதாக அமையும். வங்காள தேசத்திற்கு 600 மெகாவாட் மின்சாரத்தை இந்தியா வழங்குகிறது. கூடுதலாக 60 மெகாவாட் மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பாக்ஸ்
‘உறவு வலுப்படும்’
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், தீவிரவாத்திற்கு எதிராக கடுகளவும் கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா – வங்காள தேச எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரு தரப்புக்கும் நலன்களை ஏற்படுத்தும் செயல்களில் நாங்கள் கவனம் செலுத்துவோம். குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.
பாக்ஸ்
டீஸ்டா நதிநீர் ஒப்பந்தம்
மேற்கு வங்கத்திற்கும், வங்காள தேசத்திற்கும் இடையே டீஸ்டா ஒப்பந்தம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. சிக்கிமில் உருவாகும் டீஸ்டா நதி மேற்கு வங்கத்தில் பாய்ந்து வங்காள தேசத்திற்கு செல்கிறது. வறட்சி காலங்களில் மேற்கு வங்கமும், வங்காள தேசமும் பாதிப்பாதி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் மாநில நலன் பாதிக்கப்படும் என்று கூறி, ஒப்பந்தத்தை ஏற்படுத்த மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதில் தீர்வு காணும் நடவடிக்கையாக மம்தாவை நேற்று மதிய விருந்துக்கு மோடி அழைத்திருந்தார். அப்போது, மம்தாவும் ஷேக் ஹசீனாவும் டீஸ்டா ஒப்பந்தம் தொடர்பாக பேசினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும், விரைவில் இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
