இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்‍குதல் நடத்தியது. இதில், தங்கள் தரப்பில் 3 வீரர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் பகுதியில் பாதுபாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்‍கிச்சூடு நடத்தியது. இதில், 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில், மன்தீப்சிங் என்ற வீரர் உடல் சிதைக்‍கப்பட்டு கொடூரமாகக்‍ கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்‍கும் விதமாக, எல்லைக்‍ கட்டுப்பாடு கோடு அருகே, 15க்‍கும் மேற்பட்ட பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து இந்திய ராணுவம் அதிரடி தாக்‍குதல் நடத்தியது. இதில், தங்கள் தரப்பில் 3 வீரர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்‍குதலைத் தொடர்ந்து, இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனால் இருநாடுகளிடையே எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்‍குதலில் ஈடுபட்டு வருவதற்கும், இந்திய வீரரின் உடலை சிதைத்து கொன்றதற்கும், பாகிஸ்தான் துணை தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.