எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் …. இந்தியா , சீனாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்..சிக்கிம் மாநிலம், Dokalam எல்லைப் பகுதியில் நீடித்துவரும் பதற்றமான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவர, இந்தியாவும் சீனாவும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய Dokalam எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் அண்மையில் தடுத்து நிறுத்தியதுடன், அப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவும், Dokalam பகுதியை தங்களுடையது என உரிமை கொண்டாடுவதுடன், அங்கிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. 

எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுகாண, இந்தியா-சீனா இடையே இதுவரை இடையே 19 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இருப்பினும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாஃப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள BRICS அமைப்பின் உச்சி மாநாடு, சீனாவின் Xiamen நகரில், வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டையொட்டி, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜீத் தோவல், வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சீனா செல்கிறார். அப்போது சீன நாட்டின் ஆலோசகர் Yang Jiechi-ஐ அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்த சந்திப்பின் மூலம், Dokalam எல்லைப் பகுதியில் காணப்படும் பதற்றமான சூழ்நிலைக்கு தீர்வு காண வாய்ப்பு ஏற்படும் என, பாதுகாப்பு தொடர்பான சீன ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இந்தியாவும் சீனாவும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று அமெரிக்ககா வலியுறுத்தியுள்ளது. இத்தகைய முயற்சிக்கு அமெரிக்கா ஊக்கம் அளிக்கும் என்ற அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரி Gary Ross தெரிவித்துள்ளார்.